கிருஷ்ணரின் ஆனந்தமான ஹோலி விளையாட்டு


விருந்தவனம் / விரஜபூமியில் ஹோலி என்பது மிகவும் வண்ணமயமான ஒரு பண்டிகையாகும். கிருஷ்ணர் இப்பண்டிகையை மிகவும் சந்தோஷமாக கோபர்கள் மற்றும் கோபியர்களுடன் பங்கு கொள்ளுவார். 


ஒரு சமயம் கோபர்கள் ஒன்று சேர்ந்து நந்தபவனத்தை நோக்கி ஹோலி விளையாட ஆரவாரத்துடன் வந்தனர். கோப சகாக்கள் வாயிலில் நின்று கொண்டு "கண்ணா, கண்ணா வெளியில் வா! நாம் எல்லாரும் சேர்ந்து ஹோலி விளையாடலாம், ஏ!! லாலா வெளியில் வா!" என அழைத்தனர். 


இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கிருஷ்ணரின் மீது வர்ணம் கலந்த நீரை பீச்சாங்குழலில் ஊற்றி பீச்சி விளையாட ஆவலாக இருந்தார்கள்



கிருஷ்ணர் ஆரவாரத்தை கேட்டவுடன் வீட்டிற்க்குள் ஓடி தாய் யசோதையின் மடியில் சென்று ஒளிந்து கொண்டார்.


அவர் அன்னை யசோதையிடம் 'அம்மா! அம்மா ! எனக்கு வர்ணம் என்றால் ஒரே அச்சம். மேலும் நானோ தனியாக உள்ளேன் சகாக்களோ நிறைய பேர் உள்ளனர். என் மீது மிக அதிகமான வண்ணம் தூவுவர். ஆகவே நான் ஒளிந்து கொள்கிறேன்' . அம்மா நீங்கள் வெளியில் சென்று, நான் வீட்டில் இல்லை என கூறுங்கள் என்றார். 


தாய் யசோதா இனிமையான கிருஷ்ணரின் சொல்லில் மயங்கி, கிருஷ்ணர் வீட்டில் இல்லை என்று கூற ஒப்பு கொண்டார். வெளியில் சென்று அவ்வாறே கூறினார்.


ஆனால் சகாக்கள் இதை ஏற்க மறுத்தனர். எங்களில் ஒருவர் வீட்ற்குள் சென்று சோதனை செய்த பின்னரே நீங்கள் கூறுவதை நாங்கள் ஒப்பு கொள்வோம், என வாதிட்டனர். வேறு வழி இன்றி தாய் யசோதை ஒப்புக்கொண்டார். கிருஷ்ணரின் ப்ராமண நண்பனான மதுமங்கலை உள்ளே சென்று சோதனை செய்ய நியமித்தனர்.


மதுமங்கல் , நந்தபவனம் முழுவதும் மிக நன்றாக தேடி கிருஷ்ணரை கண்டுபிடித்தான். கிருஷ்ணரை கடிந்து கொண்டு "ஏ கண்ணா !! எப்படி நீ உனது நண்பர்களிடம் பொய் சொல்வாய்!! இது சரியில்லை " என்றும் உடனே வெளியில் வந்து ஹோலி விளையாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் வற்புறுத்தினார்.


ஆனால் , கிருஷ்ணருக்கோ வெளியில் வர இஷ்டம் இல்லை. மதுமங்கலை வெளியில் சென்று தான் வீட்டில் இல்லை என கூறுமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு, மதுமங்கல் இணங்கவில்லை, வெளியில் வந்தே ஆகவேண்டும் என்றும் வற்புறுத்தினான்.


விஷமக்கார கண்ணனுக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியது. மதுமங்கலுக்கு, லட்டு என்றல் கொள்ளை பிரியம்; ஆகவே, மற்ற சகாக்ளிடம் தான் அங்கு இல்லை என்று கூறினால் அவனுக்கு மிக அதிகமான எண்ணிக்கையில் லட்டுகள் தருவதாக சொன்னார். அவ்வாறு கூறினால் எல்லோரும் அவ்விடத்திலிருந்து சென்றுவிடுவார்கள் மேலும் தான் ஹோலி விளையாட்டில் இருந்து தப்பலாம் என்று நினைத்தார்.


மதுமங்கல் மிகவும் உஷாராக தனது லட்டுகளை முதலில் பெற்றுக்கொண்டான், பின்னர் அவ்வாறே கூறுவதாக ஒப்புக்கொண்டு கை நிறைய லட்டுகளுடன் வெளியில் சென்றான். ஆவலாக காத்துக்கொண்டிருந்த நண்பர்களை நோக்கி, பொய் என்பதே சொல்லத்தெரியாத மிக எளிமையான கிராமத்து சிறுவன் என்பதால், "கிருஷ்ணர் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறான், ஆனால் அவன் உள்ளே இல்லை என்று என்னை சொல்ல சொன்னான்" என்றான்.


இதை கேட்டவுடன் அத்தனை சகாக்களும் ஆரவாரித்தனர். சிரிப்பும் கும்மாளமுமாக ஆரவாரத்துடன் நந்தபவனத்திற்குள் நுழைந்தனர். 


கட்டிலின் அடியில் ஒளிந்திருந்த கிருஷ்ணரை இழுத்து எல்லா விதமான வர்ணங்கள் நிறைந்த நீரை அவர் மேலே பீச்சி ஆனந்தமாக விளையாடினர். கிருஷ்ணரும் மிக ஆனந்தமாக விளையாடினார் "பக்த-பிலாஷி சரித அனுசாரி" - பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிருஷ்ணர் செயல்படுவார் என்பதே அர்த்தம் ஆகும்.





ஹரே கிருஷ்ண

Comments

Popular posts from this blog

அபார ஏகாதசியின் மஹத்துவம்

ஏகாதசி விரதம்...!!

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்