மணல்மேட்டினைக் கண்டு ஓடுதல்
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மணல்மேட்டினைக் கண்டு ஓடுதல்
ஒருநாள் மஹாபிரபு தமது மதிய குளியலுக்காக கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மணல்மேட்டினைக் கண்டார். அதனை கோவர்தன மலை என்று தவறாக எண்ணி, தெய்வீக பைத்தியக்காரத்தனத்துடன் அதனை நோக்கி ஓடினார். கோவர்தனத்தைப் புகழ்ந்து கோபியர்கள் பாடிய பாடலை உச்சரித்த வண்ணம் அவர் அதனை நோக்கி மின்னலைப் போன்று ஓடினார்.
அவரது குரல் அடைபட்டது, கண்ணீர் கன்னங்களின் வழியே பெருக்கெடுத்து ஓடியது. காற்றைப் போன்ற வேகத்துடன் சைதன்ய மஹாபிரபு விரைந்து ஓட, அவரது பக்தர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது துவாரங்களிலிருந்து இரத்தம் வெளியேறியது, உடல் வெண்ணிறமாக மாறியது. கடல் அலைகளைப் போல நடுங்கியபடி, அவர் நிலத்தில் உணர்வற்று வீழ்ந்தார். பக்தர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கினர்.
கோவிந்தர் தமது குடுவையிலிருந்த நீரினை மஹாபிரபுவின் உடலில் தெளிக்க, ஸ்வரூப தாமோதரரும் மற்ற பக்தர்களும் “கிருஷ்ண! கிருஷ்ண!” என்று அவரது காதில் பலமாக உச்சரித்தனர். சற்று நேரத்தில் “ஹரி! ஹரி!” என்று முழங்கியபடி கௌரங்கர் குதித்து எழுந்தார். அவர் வெளிப்புற உணர்விற்குத் திரும்பியதைக் கண்ட பக்தர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு மிக்க மகிழ்ச்சியுற்றனர். ஆனால் பாதி உணர்விற்கு மட்டுமே திரும்பிய சைதன்ய மஹாபிரபு, கிருஷ்ணரின் பிரிவினால் மிகுந்த மன வருத்தத்துடன் கதறி அழுதபடி, “என்னை ஏன் மீண்டும் இங்கு கொண்டு வந்தீர்? நான் கிருஷ்ணரை ராதாராணியுடனும் கோபியர்களுடனும் கோவர்தன மலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து என்னை வெளியேற்றி இங்கு ஏன் கொண்டு வந்தீர்கள்?” என்று துன்பத்துடன் ஸ்வரூப தாமோதரரிடம் வினவினார்.
Comments
Post a Comment