பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது
பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது
( நரசிம்ம புராணம், இருபத்தி எட்டாவது அத்தியாம்)
நரசிம்ம புராணத்தின் இருபத்தி எட்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீல சூத கோஸ்வாமி பரத்வாஜ முனிவரிடம், நாரத மகரிஷி மற்றும் ஸந்தனு மன்னருக்கிடையே நடைபெற்ற உரையாடலை கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார்:
ஸந்தனு மஹாராஜா பகவான் நரசிம்மதேவரின் பக்தராக இருந்தார். மேலும் நாரத முனிவரின் வழிகாட்டுதலின்படி, ஸந்தனு மன்னர் பகவானை வழிபட்டுவந்தார். ஒருமுறை கவனக்குறைவாக நிர்மால்யத்தை, அதாவது நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை கால்களால் மிதித்துவிட்டார். இத்தகைய குற்றத்தின் பலனாக, அவர் அக்கணமே தனது பலத்தை இழந்து, தேவர்களால் தனக்கு வழங்கப்பட்டிருந்த ரதத்தில் ஏற முடியாமல் தடுமாறினார். இதனைக் கண்டு அதிசயித்த மன்னர், “எதனால் நான் எனது சக்தியை இழந்து, நகரவும் முடியாமல் இருக்கின்றேன்?” என்று எண்ணினார்.
மன்னர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர், “என்னவாயிற்று அரசரே?” என்று வினவினார்.
அதற்கு ஸந்தனு, “நாரதரே, என்ன காரணத்தினால் நான் எனது பலம் அனைத்தையும் இழந்து நகரவும் முடியாமல் தவிக்கின்றேன் என்று தெரியவில்லை” என்றார்.
இதனைக் கேட்ட நாரதர், இதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அதன்பின்னர் அவர் தன்முன்னர் பணிவுடன் நின்ற மன்னரை நோக்கி, “அரசரே, இது நிச்சயமாக தாங்கள் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை, நிர்மால்யத்தை மிதித்த குற்றத்தின் விளைவே. அதனால் தான் தங்களால் நகரவும் முடியவில்லை. இது குறித்து புராதன வரலாறு ஒன்றை நான் கூறப்போவதை கவனமாக கேளுங்கள்:
ஒருமுறை, கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் அமைந்துள்ள அந்தர்வேதி என்ற இடத்தில் ரவி என்கின்ற புத்திசாலியான பூக்காரர் ஒருவர் இருந்தார். அவர் மிகப்பெரிய துளசி தோட்டம் ஒன்றை அமைத்து அதனை “விருந்தாவனம்” என்றழைத்தார். அந்த தோட்டத்தில், மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ மற்றும் பகுள எனப்படும் பல்வேறு வகையான மலர் செடிகளையும் வளர்த்து வந்தார். யாரும் உள்ளே நுழையாதபடி தோட்டத்தை சுற்றி மிக உயரமான மதில் சுவற்றை எழுப்பியிருந்தார், தோட்டத்திற்குள்ளேயே அவருடைய வீடும் இருந்தது. தோட்டத்திற்குள் யாரும் நுழையாத முடியாதபடி முன்பகுதியில் வீட்டை கட்டியிருந்தார். பூக்காரர் அந்த தோட்டத்தை மிகவுமே நேசித்தார். தோட்டம் முழுவதும் மலர்களால் நிறைந்திருந்ததால், அந்த பகுதி முழுவதுமே நறுமணத்தால் நிறைந்திருந்தது. அந்த பூக்காரர் தினந்தோறும் தனது மனைவியுடன் இணைந்து மலர்களைப் பறித்து மாலைகள் தொடுப்பார். தொடுத்துவைத்த நிறைய மாலைகளில் சிலவற்றை நரசிம்மருக்கு வழங்குவார், சிலவற்றை பிராமணர்களுக்கு பரிசாக வழங்குவார், மீதி மாலைகளை விற்று, தனது குடும்பத்தை பராமரித்து வந்தார்.
“சிறிது காலத்திற்கு பிறகு, இந்திரனின் மகனான ஜயந்தன், ரவியினுடைய அழகான தோட்டத்தைக் கண்டார். அன்றையே இரவே ஜயந்தன் ஸ்வர்க்க லோகத்து மங்கைகளுடன் ரவியினுடைய தோட்டத்திற்கு வந்தார். நறுமண மலர்களினால் கவரப்பட்டு, அவைகள் அனைத்தையும் தனது பெண் தோழிகளுக்கு வழங்குவதற்காக பறிக்கத் தொடங்கினார். நாளடைவில் செடிகளில் மலர்களே இல்லாமல் இருப்பதைக் கண்டு ரவி குழப்பம் அடைந்தார். “எனது வீட்டிற்குள் நுழையாமல் தோட்டத்திற்குள் நுழையவே முடியாது. தாண்டிவரமுடியாதபடி தோட்டத்தின் மதில் சுவர்களும் மிக உயரமாக உள்ளன. நிச்சயமாக மனிதர்களால் இரவு நேரத்தில் இவ்வளவு மலர்களை பறிக்கவேமுடியாது, எனவே இதனை மறைந்திருந்து கண்காணிக்க வேண்டும்” என்று முடிவு செய்தார்.
எனவே அந்த பூக்காரர் தோட்டத்திற்குள் யாரும் காணாதவாறு ஒளிந்துகொண்டார். ஜயந்தனும் எப்போதும் போலவே தோட்டத்திற்குள் நுழைந்து மலர்கள் அனைத்தையும் பறித்தார். பூக்காரர் ஜயந்தனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவரால் அவரைத் தடுக்க முடியவில்லை. மனவேதனையுடன் அவர் தோட்டத்திலேயே உறங்கிவிட்டார். அப்போது அவருடைய கனவில் நரசிம்மதேவர் தோன்றி, “மகனே கவலைப்படாதே, உடனடியாக எனது நிர்மால்ய மலர்களைக் பெற்று, அதனை தோட்டம் முழுவதும் போட்டு வைப்பாயாக. இந்திரனின் மகனை இங்கு வரவிடாமல் தடுப்பதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.
கனவிலிருந்து விழித்தெழுந்த ரவி, உடனடியாக நரசிம்மதேவர் கூறியபடி நிர்மால்ய மலர்களை பெற்றுவந்து, தோட்டம் முழுவதும் போட்டுவைத்தார்.
“அன்று இரவும் கண்களுக்கு புலப்படாத தனது இரதத்தில் வந்திறங்கிய ஜயந்தன் மலர்களைப் பறிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது கவனக்குறைவாக, அந்த தோட்டத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த பகவான் நரசிம்மரின் நிர்மால்ய பிரஸாதத்தை கால்களால் மிதித்துவிட்டார். உடனடியாக தனது பலத்தை இழந்த ஜயந்தன் ரதத்தில் ஏறமுடியாமல் தடுமாறினார். இதனைக் கண்ட ரதசாரதி, “நரசிம்ம தேவரின் நிர்மால்ய மலர்களை கால்களால் மிதித்த காரணத்தினால், தாங்கள் இப்போது ரதத்தில் ஏறுவதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். எனவே நான் ஸ்வர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்கிறேன். தாங்கள் இனி பூமியில் தான் இருந்தாக வேண்டும். எனவே ரதத்தில் ஏறுவதற்கு முயற்சிக்க வேண்டாம்” என்றார்.
அதற்கு இந்திரனின் மகன் சாரதியிடம், “சாரதியே, ஸ்வர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்லும்முன்னர், நான் இழைத்துள்ள குற்றங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையை கூறிவிட்டு, அதன்பின்னர் எனது தந்தையின் பேரரசிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்றார்
சாரதியும், “குருக்ஷேத்ர புண்ணிய பூமியில், பெரும் முனிவரான பரசுராமர் பன்னிரெண்டு வருடங்களுக்கு தொடரும் யாகத்தை மேற்கொண்டுள்ளார். நீ அங்கு சென்று, தினந்தோறும் பிராமணர்களின் உச்சிஷ்டத்தை சுத்தப்படுப்பத்தும் சேவையை மேற்கொள்வாயாக. யாக அரங்கினை சுத்தப்படுத்துவதின் மூலமாக உனது குற்றங்களிலிருந்து விடுபடலாம்” என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு அந்த சாரதி தேவ லோகத்திற்கு கிளம்பிவிட்டார்.
சாரதியின் அறிவுரையின்படி இந்திரனின் மகன், சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ள குருக்ஷேத்ரத்திற்கு சென்றார். அங்கே அவர் பிராமணர்களின் உச்சிஷ்டத்தை சுத்தப்படுத்துவதின் மூலமாக பரசுராமரின் யாக அரங்கை சுத்தப்படுத்தினார். பன்னிரெண்டு வருட யாகம் நிறைவடைந்தபின்னர், ஜயந்ததின் நடவடிக்கையால் மகிழ்ந்த பிராமணர்கள் அவரிடம், “மேன்மைக்குரியவரே, நாள் தவறாமல் தாங்கள் எங்களுடைய எச்சங்களை சுத்தப்படுத்தி, யாக அரங்கை சுத்தமாக வைத்திருந்தீர்கள். இவ்வளவு காலமும் தாங்கள் எதுவுமே சாப்பிடவில்லை. இதுகுறித்து எங்களுக்கு கவலையாக இருக்கிறது. தாங்கள் யார் என்பதை கூறுங்கள்” என்றனர். பிராமணர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட ஜயந்தன் நடந்தவைகளை விளக்கிவிட்டு, தனது தந்தையின் லோகத்தை சென்றடைந்தார்.
இதனையடுத்து நாரதமுனிவர் அரசரிடம், “தாங்களும் பரசுராமரின் பன்னிரெண்டு வருட யாகத்தில் பிராமணர்களின் உச்சிஷ்டங்களை சுத்தப்படுத்தி யாக அரங்கை சுத்தப்படுத்தும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒருவருடைய பாவங்களை போக்கிக் கொள்வதற்கு பிராமணர்களுக்கான சேவையைத் தவிர வேறுஎதுவும் உயர்ந்தது இல்லை. அரசரே, எனது வழிநடத்துலைப் பின்பற்றினால் மிக எளிதாக தேவர்களால் வழங்கப்பட்ட ரதத்தை திரும்பப் பெறலாம். இனிமேல், நரசிம்மருக்கு அல்லது விக்ரஹங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை காலால் மிதித்துவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்” என்றார்.
நாரதமுனிவரின் அறிவுரையின்படி ஸந்தனு மன்னர் பன்னிரெண்டு வருடங்கள் பிராமணர்களின் உச்சிஷ்டங்களை சுத்தப்படுத்தும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன்மூலமாக அவர் ரதத்தில் ஏறுவதற்கு தான் இழந்திருந்த சக்திகளை மீண்டும் திரும்பப்பெற்றார்.
(ஜெகந்நாத புரியின் உள்ளூர் வழக்கப்படி, ஜெகந்நாதரின் மஹாபிரஸாத்தை கால்களினால் மிதித்து குற்றமிழைப்பவர், நாள்பட்ட நோயான யானைக்கால் வியாதியால் அவதிப்படுவர் என்று கூறப்படுகிறது.” )
ஒருவன் திருமூர்த்ததிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களைத் தாண்டவோ, கால்களினால் மிதிக்கவோ கூடாது என்று ஸ்ரீல பிரபுபாதர் பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் நூலில் எட்டாம் அத்யாயத்திற்கான பொருளுரையில் விளக்குகிறார் .
இது ஸனாதன கோஸ்வாமியாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது:
க்ஞேயா: பரே ‘பி பஹவோ ‘பராதா: ஸத்-அஸம்மதை:
ஆசரை: ஷாஸ்த்ர-விஹித-நிஷித்தாதி-க்ராமதிவிஹி
தத்ராபி ஸர்வதா-க்ருஷ்ண நிர்மால்யம் து ந லங்கயேத்
அத்துடன் எண்ணற்ற விதிமுறைகள் இருப்பதாக சாஸ்திரங்களும் வைஷ்ணவர்களும் விவரிக்கின்றனர். உதாரணமாக, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களைத் தாண்டவோ, கால்களினால் மிதிக்கவோ கூடாது.
Comments
Post a Comment