சிந்தையிலே இறைவனை வைத்த சிந்தையந்தி
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
பெண்பிள்ளையின் அடுத்த வாக்கியம், இந்த உலகில் நமக்கு மிகவும் பிடித்தது நம் உடம்புதான். அந்த தேகத்தை அழகுபடுத்தி, நல்ல உணவு உண்டு, எந்தத் தீங்கும் இல்லாமல் பாதுகாக்கிறோம். நோய் நொடி இன்றி நம் உடம்பே நமக்கு முதன்மை என்று நினைக்கிறோம். அந்த தேகத்தை இறைவனுக்காக விட்டாள் ஒருத்தி.
சிந்தையிலே இறைவனை வைத்ததால் அவள் சிந்தையந்தி. அக்ரஹார வீடுகளுக்கு, தயிர், பால், விற்கும் ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனின் லீலா விநோதங்களை சொல்லுவர். அதைகேட்ட ரிஷி பத்தினிகளுக்குக் கண்ணனை காண வேண்டும் என்ற பேராவல் வந்தது.
நாமும் கண்ணனை சேவிப்போம் என்று காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. ரிஷிகள் பிருந்தாவனம் சென்று யாக, யக்ஞங்கள் செய்யப் புறப்பட்டனர். அவர்களுடன் அவர்களின் தர்ம பத்தினிகளையும் அழைத்துச் சென்றனர். மிகவும் பரவசத்தோடு கண்ணனை சேவிக்க பிருந்தாவனம் போகிறோம் என்று ஆனந்தப்பட்டனர்.
பிருந்தாவனத்தில் கண்ணன், பலராமர் இருவரும் ஆயர்குல சிறுவர்களுடன் ஆடு, மாடுகள் மேய்த்திருந்தனர். அவர்களிடம் ஆயர்குல சிறுவர்கள் தினம் எங்களுக்குப் பழங்கள் மட்டுமே பறித்துக் கொடுக்கிறாயே கண்ணா இன்று வேறு ஏதாவது சாப்பிட கொடு என்றனர்.
கண்ணன் உடனே அங்கே ரிஷிகள் யாகம் செய்கிறார்கள் அங்கு ரிஷி பத்தினிகள் செய்து வைத்த பலகாரங்கள் கிடைக்கும், போய் கேட்டுச் சாப்பிடுங்கள் என்றான். சிறுவர்களும் கண்ணனின் பேச்சுக்கு மறுப்பு சொல்லாமல் போய் கேட்டனர். ரிஷிகள் யாகம் பூர்த்தியாகவில்லை என்று அனுப்பிவிட்டனர்.
ஆனால், கண்ணனுக்காக ரிஷி பத்தினிகள் அனைத்து பட்சணங்களையும் எடுத்துக்கொண்டு கண்ணனை சேவிக்க, பலகாரங்களை அர்ப்பணிக்க விரைந்து ஓடினர். ரிஷிகள் தடுத்தும் நிற்காமல் சென்றனர்.
ஆனால், ஒரே ஒரு ரிஷி மட்டும் தன் பத்தினியை கட்டாயம் போகக் கூடாது என்று தடுத்தார். உடனே அவள் தரையில் விழுந்து தன் உயிரைவிட்டாள். உடல் விழுந்து ஆன்மா கண்ணனிடம் சென்றது. மற்ற பெண்கள் சென்று சேருவதற்கு முன் கண்ணனுடன் கலந்துவிட்டாள் சிந்தையிலே இறைவனை வைத்த சிந்தையந்தி.
இறைவனை சேவிக்காத உடல் வேண்டாம் என்று தன் தேகத்தைவிட்டாள் அந்த ரிஷி பத்தினி. பெண்பிள்ளை அந்த ரிஷி பத்தினியைப் போலே நான் இல்லையே சுவாமி என்று வருந்தினாள்.
Comments
Post a Comment