கோபீ சந்தனத்தின் மகிமை
கோபீ சந்தனத்தின் மகிமை
கோபீ சந்தனத்தின் மகிமை
ஆதாரம் - ஶ்ரீ கர்க ஸம்ஹிதை / ஆறாம் காண்டம் / அத்தியாயம் 15
நாரத முனிவர், பஹூலாஸ்வ மன்னரிடம் கூறினார் . மன்னா! இனி கோபீபூமியின் மகிமையைக் கேள். இது பாவம் போக்கும் உத்தமமான தீர்த்தமாகும். அதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் கர்ம பந்தனத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது கோபிகள் அங்கு வாசம் செய்த காரணத்தாலேயே அந்த இடம் கோபி பூமி என்னும் பெயரில் பிரபலமாகி உள்ளது. அங்கு கோபிகளுடைய அங்கப் பூச்சினால் தோன்றிய உத்தமமான கோபிசந்தனம் கிடைக்கிறது. தன் அங்கத்தில் கோபி சந்தனம் தரிப்பவனுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது எப்போதும் கோபி சந்தனத்தால் அடையாளமிடப்பட்டவன், அதாவது கோபி சந்தனமுத்திரை திலகமணிபவன் ஒவ்வொரு நாளும் மஹா நதியில் நீராடிய புண்ய பலனை அடைகிறான்
அவன் ஆயிரம் அச்வமேதமும் நூறு ராஜசூய யாகமும் செய்தவனாகிறான் எல்லா தீர்த்தங்களின் சேவையும் தான-விரதங்களின் அனுஷ்டானமும் செய்தவனாகிறான். நிச்சயம் அவன் கோபிசந்தனம் தரித்ததினால் மட்டுமே தன்யனாகி விடுகிறான். கங்கையின் மண்ணைக்காட்டிலும் இருமடங்கு புண்ணியம் சித்ரகூட மண்ணுக்கு உண்டு என்று கருதப்படுகிறது. அதைக்காட்டிலும் பத்து மடங்கு புண்ணியம் பஞ்சவடி மண்ணுக்கும் அதையும் விட நூறு மடங்கு புண்ணியம் கோபீ சந்தன மண்ணுக்கும் உண்டு. கோபி சந்தனத்தை நீ பிருந்தாவனத்துக்கு நிகரானது என்பதை அறிந்து கொள். கோபி சந்தனமிடப்பட்ட சரீரம் நூற்றுக்கணக்கான பாவங்களோடு இருப்பினும் அதை யமராஜன் தன்னுடன் எடுத்துச்செல்ல முடியாது என்றால் யம தூதர்களைப் பற்றி என்ன கூறுவது? பாவியாக இருந்தாலும் தினந்தோறும் கோபி சந்தனத்தை உடலில் தரிப்பவன் இயற்கையின் குணங்கள் பிரவேசிக்க முடியாத ஸ்ரீஹரியின் கோலோக தாமத்திற்குச் செல்கிறான்.
**மன்னர் தீர்கபாஹூ**
சிந்து தேசத்தில் தீர்க்கபாஹூ என்னும் ஒரு மன்னன் இருந்தான். அவன் அநியாயமான வகையில் வாழ்க்கை நடத்தியவன் துஷ்டன், எப்போதும் பொது மகளிரின் சங்கத்திலேயே இருந்தவன் அவன் பாரத பூமியில் நூற்றுக்கணக்கான பிராமணர்களைக் கொன்றவன். அந்தத் தீயவன் பத்து கர்ப்பிணிகளைக் கொன்றவன் அவன் வேட்டையாடும் போது தன் அம்புகளால் கபிலா இன பசுக்களைக் கொன்றவன். ஒருநாள் அவன் சிந்துதேசக் குதிரையில் ஏறி மான் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அங்கு அவனிடம் கோபமுற்றிருந்த மந்திரி ஒருவன் அரசுப் பேராசையால் அந்தத் தீய மன்னனை கூர்மையான முனையுள்ள கத்தியால் அந்தக் காட்டிலேயே கொன்றுவிட்டான். அவன் மரணமடைந்து பூமியில் கிடப்பதைக் கண்ட யமனுடைய பணியாட்கள் கட்டி, பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு அவனை யமபுரிக்கு எடுத்துச் சென்றனர். அந்தப் பாவி எதிரில் நிற்பதைக்கண்ட எமராஜன் சித்ரகுப்தனிடம் இவனுக்குத் தகுதியான கஷ்டம் (வேதனை) என்ன என்று கேட்டான்.
சித்ரகுப்தன் கூறினான்: மகாராஜா இவனை ஐயமின்றி எண்பத்து நான்கு லக்ஷம் நரகங்களிலும் மாறி மாறி வீழ்த்தினாலும் சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை இவன் நரகத்தின் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கவேண்டும். இவன் பாரத பூமியில் பிறவி எடுத்து ஒரு கணம்கூட ஒருபோதும் புண்ணியம் செய்ததே கிடையாது. இவன் பத்து கர்ப்பவதி பெண்களையும் எண்ணற்ற கபிலா பசுக்களையும் கொலை செய்திருக்கிறான். இதைத்தவிர காட்டு விலங்குகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறான். ஆகவே தெய்வ, பிராம்மண நிந்தை செய்த இவன் பெரும் பாவியாவான்
நாரதர் கூறுகிறார்: "மன்னா அப்போது யமனுடைய ஆணைப்படி யமதூதர்கள் அந்த பாவ ஆத்மாவை கும்பீபாகமெனும் நரகத்திற்கு அழைத்துச் சென்றனர். அது ஆயிரம் யோஜனை விஸ்தீரணமானது. அங்கு பெரிய கடாயில் சூடாக்கப்பட்ட எண்ணெய் நிரம்பியிருந்தது, கொதிக்கும் அந்த எண்ணெயில் நுரை ததும்பிக் கொண்டிருந்தது யமதூதர்கள் அந்த பாவியை கும்பீபாகத்தில் தள்ளினார்கள். அவன் விழுந்ததுமே பிரளய அக்னியைப் போல ஜ்வலித்துக் கொண்டிருந்த அக்னி அக்கணமே குளிர்ந்துவிட்டது. விதேஹ மன்னா பிரஹ்லாதனை கொதிக்கும் எண்ணெயில் வீசியதும் அது குளிர்ந்து விட்டதைப் போல் அந்தப் பாவியை நரகத்தில் தள்ளியதும் அங்கிருந்த ஜூவாலை சாந்தமாகிவிட்டது. யமதூதர்கள் அக்கணமே யமராஜனிடம் சென்று இந்த சம்பவத்தைக் கூறினார்கள் சித்ரகுப்தனும் யமனும் மிகுந்த கவலையில் ஆழ்ந்து இவன் புவியில் ஒரு போதும் எந்த புண்ணியமும் செய்ததில்லையே என்று யோசிக்கலாயினர். மன்னா! இதே சமயம் தாமராஜனின் சபையில் வியாசமுனிவர் எழுந்தருளினார். அவரை வரவேற்று பூஜித்த தர்மராஜர் அவரை வணங்கிக் கேட்கலானார்
யமன் கேட்டார்: 'பகவானே ! இந்தப் பாவி எப்போதும் எந்தப் புண்ணியச் செயலையும் செய்தது கிடையாது. ஆகவே நுரைததும்பும் கொதிக்கும் எண்ணெய் நிறைந்த கும்பீபாகத்தின் பெரிய கடாயில் இவன் வீசப்பட்டான். இவனைப் போட்டதுமே அங்கிருந்த தீ குளிர்ந்துவிட்டது. இதனால் என் மனம் மிகவும் கவலைப்படுகிறது.
ஸ்ரீ வியாசர் கூறினார்: 'சாஸ்திரமறிந்த பண்டிதர்களில் சிறந்த ஞானபுருஷர்கள் பிரம்மத்தின் கதி சூச்ஷமமானதென்று கூறுவதைப்போல பாவ-புண்ணியத்தின் கதியும் சூஷ்மமானது. தெய்வாதீனமாக இவனுக்குத் தானாகவே பிரத்யக்ஷமான பயனுடைய புண்ணியம் கிடைத்து விட்டிருக்கிறது. அறிவிற் சிறந்தவரே, அவன் தூய்மையடைந்ததற்கான புண்ணியத்தைக் கூறுகிறேன், கேளுங்கள். யார் கையினாலோ துவாரகாவின் மண் இருந்த இடத்திலேயே இந்தப் பாவியின் மரணம் நிகழ்ந்துள்ளது. அந்த மண்ணின் பிரபாவத்தால்தான் இந்தப் பாவி தூயவனாகி விட்டான். கோபி சந்தனப் பூச்சு உடைய அங்கத்தை உடைய நரன், நாராயணனாகி விடுகிறான். அவனது தரிசனத்தால் மட்டுமே பிரம்மஹத்தி விலகிவிடுகிறது.
நாரதர் கூறுகிறார். மன்னா! இதைக்கேட்ட தர்மராஜர் அவனை அழைத்து வந்தார். விரும்பியபடி செல்லக்கூடிய ஒரு சிறப்பு விமானத்தில் அவனை உட்காரச் செய்து இயற்கைக்கு அப்பாற்பட்டதான வைகுண்ட தாமத்திற்கு அனுப்பிவிட்டார். கோபி சந்தனத்தின் ஞானம் (பிரதாபம்) அவருக்குத் தற்செயலாக அப்போதுதான் உண்டாயிற்று மன்னா! நான் உனக்கு கோபி சந்தனத்தின் மகிமையைக் கூறிவிட்டேன். கோபி சந்தனத்தின் சிறந்த இந்த மாஹாத்மியத்தைக் கேட்பவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய பரமதாமத்திற்குச் செல்கிறான்.
Comments
Post a Comment