பஞ்ச-தத்துவ வழிபாடு
பஞ்ச-தத்துவ வழிபாடு
-----------------------------------------------------------------------------
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகிறது. அதன்படி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கௌடீய வைஷ்ணவர்கள், அவரை அவருடைய முக்கிய சகாக்களான ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ அத்வைத பிரபு, ஸ்ரீ கதாதர பண்டிதர், ஸ்ரீவாஸ தாகூர் மற்றும் இதர பக்தர்களுடன் இணைந்து பஞ்ச-தத்துவமாக (ஐந்து தத்துவங்களாக) வழிபடுகின்றனர். இந்த பஞ்ச-தத்துவ வழிபாடு கலி யுகத்திற்கு மிகவும் உகந்ததாகும். இது குறித்து ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து சில மேற்கோள்கள் இங்கே பகவத் தரிசன வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது.
-------------------------------------------------------
அபராதங்களைப் போக்கும் பஞ்ச தத்துவ வழிபாடு
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போதும் தனது முக்கிய அம்சமான ஸ்ரீ நித்யானந்த பிரபு, தனது அவதாரமான ஸ்ரீ அத்வைத பிரபு, தனது அந்தரங்க சக்தியான ஸ்ரீ கதாதர பிரபு, தனது நடுத்தர சக்தியான ஸ்ரீவாஸ பிரபு ஆகியோரால் சூழப்பட்டுள்ளார். அவர்களின் மத்தியில் அவர் பரம புருஷ பகவானாக உள்ளார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இந்த இதர தத்துவங்களால் எப்போதும் சூழப்பட்டுள்ளார் என்பதை ஒருவன் அறிய வேண்டும். எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கான நமது வணக்கங்கள், ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த என்று சொல்லும்போது முழுமை பெறுகின்றது. கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிரசாரகர்கள் என்ற முறையில், இந்த பஞ்ச-தத்துவ மந்திரத்தினை உச்சரித்து நாங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை முதலில் நமஸ்கரிக்கின்றோம்; அதன் பிறகு, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று கூறுகிறோம். ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிக்கும்போது பத்து அபராதங்கள் நிகழலாம். ஆனால், ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த எனும் பஞ்ச-தத்துவ மந்திரத்தினை உச்சரிக்கும்போது அந்த அபராதங்கள் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. வீழ்ச்சியுற்ற ஜீவன்களின் அபராதங்களை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கண்டுகொள்வதில்லை என்பதால், அவர் மஹா-வதான்யாவதார, மிகமிக கருணை வாய்ந்த அவதாரம் என்று அறியப்படுகிறார். எனவே, மஹா மந்திரத்தை (ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே) உச்சரிப்பதன் பூரண பலனைப் பெறுவதற்கு, நாம் முதலில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் தஞ்சமடைய வேண்டும், பஞ்ச-தத்துவ மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பல்வேறு மனசாட்சியற்ற பக்தர்கள் தங்களது சொந்த மஹா மந்திரத்தினை தயாரிக்கின்றனர். சில நேரங்களில், அவர்கள், பஜ நிதாய் கௌர ராதே ஷ்யாம ஹரே க்ருஷ்ண ஹரே ராம அல்லது ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஹரே க்ருஷ்ண ஹரே ராம ஸ்ரீ-ராதே கோவிந்த என்றெல்லாம் பாடுகின்றனர். இருப்பினும், உண்மையில், ஒருவன் பஞ்ச-தத்துவத்தின் முழு பெயர்களை உச்சரிக்க வேண்டும் (ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த), அதன் பின்னர் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் பதினாறு வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும். ஆனால் இத்தகு மனசாட்சியற்ற குறை புத்தியுடைய மனிதர்கள் ஒட்டுமொத்த வழிமுறையையும் குழப்புகின்றனர். அவர்களும் பக்தர்கள் என்பதால். அவர்கள் தங்களுடைய உணர்வுகளை இப்படி வெளிப்படுத்துகின்றனர் என்று எடுத்துக்கொள்ளலாம்; இருப்பினும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தூய பக்தர்களால் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை, முதலில் முழு பஞ்ச-தத்துவ மந்திரத்தையும் உச்சரித்து, அதன் பின்னர் மஹா மந்திரத்தை ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என உச்சரிப்பதேயாகும். (ஆதி லீலை 7.4 பொருளுரை)
-------------------------------------------------------
வேறுபாடும் ஒற்றுமையும்
“தெய்வீகத் தளத்தில் அனைத்தும் பூரணமானவை என்பதால், இந்த ஐந்து தத்துவங்களுக்கு மத்தியில் ஆன்மீகமாக எந்தவொரு வேறுபாடும் இல்லை. இருப்பினும், ஆன்மீக உலகிலும் வகைகள் இருக்கின்றன, அத்தகு ஆன்மீக வகைகளையும் தன்மைகளையும் சுவைப்பதற்காக ஒருவன் அவர்களை வேறுபடுத்திக் காண வேண்டும்.”
பொருளுரை: ஸ்ரீ பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தனது அனுபாஷ்ய விளக்கவுரையில் பஞ்ச-தத்துவத்தினை பின்வருமாறு விளக்குகிறார்: ஐந்து வகையான லீலைகளை அனுபவிப்பதற்காக பரம சக்திமானான முழுமுதற் கடவுள் பஞ்ச-தத்துவத்தின் உறுப்பினர்களாக தோன்றுகிறார். உண்மையில் அவர்கள் பூரணத்தின் தளத்தில் நிலைபெற்றிருப்பதால், அவர்களுக்கு இடையில் எந்த வேற்றுமையும் இல்லை, ஆயினும், வெவ்வேறு ஆன்மீக ரஸங்களை சுவைப்பதற்காகவும் அருவவாதிகளுக்கு சவால் விடுவதற்காகவும் அவர்கள் வெவ்வேறு ஆன்மீக வகைகளை வெளிப்படுத்துகின்றனர். பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே, புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பல வகையான சக்திகள் பல்வேறு விதங்களில் அறியப்படுகின்றன, என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது. வேதங்களின் இந்த கூற்றிலிருந்து ஆன்மீக உலகில் பலதரப்பட்ட நித்தியமான ரஸங்கள் அல்லது சுவைகள் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஸ்ரீ கௌராங்கர், ஸ்ரீ நித்யானந்தர், ஸ்ரீ அத்வைதர், ஸ்ரீ கதாதரர், ஸ்ரீவாஸ தாகூர் ஆகிய அனைவரும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். ஆயினும், அவர்களுக்கு இடையில் ஆன்மீக வேற்றுமையை ஏற்படுத்தும் போது, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை பக்தரின் ரூபமாகவும், நித்யானந்த பிரபு பக்தருடைய ஆன்மீக குருவின் ரூபத்தில் தோன்றுவதாகவும், அத்வைத பிரபு பக்த அவதாரத்தின் ரூபமாகவும், கதாதர பிரபு பக்த சக்தியாகவும், ஸ்ரீவாஸ தாகூர் தூய பக்தராகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இவ்வாறாக இவர்களுக்கு இடையில் ஆன்மீக வேற்றுமைகள் உள்ளன. பக்த-ரூப (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு), பக்த-ஸ்வரூப (ஸ்ரீ நித்யானந்த பிரபு), பக்த-அவதார (ஸ்ரீ அத்வைத பிரபு) ஆகியோர் சாக்ஷாத் பரம புருஷ பகவான், அவரது உடனடி தோற்றம் மற்றும் அவரது முக்கிய அம்சம் என்றும், அவர்கள் அனைவரும் விஷ்ணு-தத்துவ பிரிவைச் சார்ந்தவர்கள் என்றும் விளக்கப்பட்டுள்ளனர். பரம புருஷ பகவானின் ஆன்மீக சக்தியும், நடுத்தர சக்தியும்கூட பரம புருஷ பகவான் விஷ்ணுவிலிருந்து வேறுபட்டவை அல்ல என்றபோதிலும், அவர்கள் ஆதிக்கம் செலுத்தப்படும் நபர்கள், பகவான் விஷ்ணுவோ ஆதிக்கம் செலுத்துபவர். இவ்வாறாக, அவர்கள் ஒரே தளத்தில் இருந்தாலும், தெய்வீக ரஸத்தினைச் சுவைப்பதற்கு உகந்தாற்போல அவர்கள் பல்வேறு ரூபங்களில் தோன்றியுள்ளனர். இருப்பினும், உண்மையில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டவராக இருப்பது சாத்தியமில்லை, வழிபடுபவரும் வழிபடப்படுபவரும் எந்த நிலையிலும் பிரிக்கப்பட முடியாதவர்கள். பூரணத்தின் தளத்தில், ஒருவரை மற்றவரின்றி புரிந்துகொள்ள இயலாது. (ஆதி லீலை 7.5)
-------------------------------------------------------
பஞ்ச-தத்த்வாத்மகம் க்ருஷ்ணம்பக்த-ரூப ஸ்வரூபகம்
பக்தாவதாரம் பக்தாக்யம்நமாமி பக்த-ஷக்திகம்
“பக்தனாக, பக்தனின் விரிவாக, பக்த அவதாரமாக, தூய பக்தனாக, பக்த சக்தியாக ஐந்து ரூபங்களில் தன்னை வெளிப்படுத்தியுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நான் எனது வணக்கங்களை அர்ப்பணிக்கின்றேன்.”
பொருளுரை: ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சகோதரராக அவரது உடனடி விரிவங்கமாவார். அவர் ஸச்-சித்-ஆனந்த விக்ரஹத்தின் ஸ்வரூபமான ஆன்மீக ஆனந்தமாவார். அவருடைய திருமேனி தெய்வீகமானதும் பக்தித் தொண்டின் பரவசத்தினால் நிறைந்ததுமாகும். எனவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பக்த-ரூப (பக்தனின் ரூபம்) என்று அழைக்கப்படுகிறார், ஸ்ரீ நித்யானந்த பிரபு பக்த-ஸ்வரூப (பக்தனின் விரிவங்கம்) என்று அழைக்கப்படுகிறார். பக்த அவதாரமான ஸ்ரீ அத்வைத பிரபு, விஷ்ணு-தத்துவமாவார், அவரும் அதே பிரிவைச் சார்ந்தவர். பக்தர்களிலும் ஸாந்தம், தாஸ்யம், ஸக்யம், வாத்ஸல்யம், மாதுர்யம் ஆகிய தளங்களில் வெவ்வேறு வகையினர் உள்ளனர். ஸ்ரீ தாமோதரர், ஸ்ரீ கதாதரர், ஸ்ரீ இராமானந்தர் ஆகிய பக்தர்கள் வெவ்வேறு சக்திகளாவர். பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ரூயதே என்னும் வேத சூத்திரத்தினை இது உறுதிப்படுத்துகிறது. இவ்வெல்லா பக்த தத்துவங்களும் ஒன்றாக இணைந்தவர், சாக்ஷாத் கிருஷ்ணரேயான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆவார். (ஆதி லீலை 7.6)
-------------------------------------------------------
பஞ்ச தத்துவத்திற்கு முதல் மரியாதை
கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி பஞ்ச-தத்துவத்திற்கு முதல் மரியாதை அளிக்கும்படி நமக்குக் கற்றுத் தருகிறார்–ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு, நித்யானந்த பிரபு, அத்வைத பிரபு, கதாதர பிரபு, ஸ்ரீவாஸ பிரபு மற்றும் இதர பக்தர்கள். ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த என்னும் மந்திரத்தில் சுருக்கமாக உரைக்கப்பட்டுள்ளபடி, நாம் பஞ்ச-தத்துவத்தினை நமஸ்கரிக்கும் கொள்கையினை கண்டிப்புடன் பின்பற்றுவது அவசியம். பிரச்சாரத்திற்கான ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், குறிப்பாக, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்வதற்கு முன்பாக, பஞ்ச-தத்துவங்களின் பெயரை உச்சரித்து அவர்களுக்கு நாம் நமது வணக்கங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். (ஆதி லீலை 8.4 பொருளுரை)
-------------------------------------------------------
பஞ்ச-தத்துவமின்றி முன்னேற்றம் இல்லை
பஞ்ச-தத்துவத்தின் பெருமைகளை ஏற்காமல் கிருஷ்ணருக்கான பக்தித் தொண்டில் பாவனை செய்வோர் ஒருபோதும் கிருஷ்ணரின் கருணையையோ இறுதிக் குறிக்கோளில் முன்னேற்றத்தையோ அடைய முடியாது. (ஆதி லீலை 8.7)
பஞ்ச-தத்துவ வழிபாடு இல்லாவிடில், அஃது அபராதம்
இந்த ஸ்லோகங்களில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி பஞ்ச-தத்துவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை மிகவும் தீவிரமாக வலியுறுத்துகிறார். ஒருவன் கௌரசுந்தரர் அல்லது கிருஷ்ணரின் பக்தனாகி, ஆனால் பஞ்ச-தத்துவத்தின் (ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய ப்ரபு-நித்யானந்த ஸ்ரீ-அத்வைத கதாதர ஸ்ரீவாஸாதி-கௌர-பக்த-வ்ருந்த) முக்கியத்துவத்தை அறியாமலிருந்தால், அவனது செயல்கள் அபராதங்களாகக் கருதப்படுகின்றன, அல்லது ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் வார்த்தைகளில் அவை உத்பாத (தொந்திரவுகள்) எனப்படுகின்றன. எனவே, பகவான் கௌரசுந்தரர் அல்லது புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனாவதற்கு முன்பாக, ஒருவன் பஞ்ச-தத்துவத்திற்கு உரிய மரியாதையை அளிக்கத் தயாராக இருக்க வேண்டும். (ஆதி லீலை 8.8 பொருளுரை)
Comments
Post a Comment